சிற்றில்

சிற்றில்சிறிய மணல் வீடு

எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற பதினெட்டு சங்க இலக்கிய நூல்களும் மிக இனிமையானவை. சொற்பமான சொற்கள் மூலம் 2381 பாடல்களில் நிறைய விவரங்களை சங்க புலவர்கள் நமக்கு அளித்துள்ளனர். அவற்றின் மூலம் பண்டைய தமிழகத்தின் வாழ்க்கை முறையை நாம் நன்றாக அறியலாம்.  சங்க இலக்கியத்தில் உள்ள பல நிகழ்வுகளை பிற்கால இலக்கியங்கள் கையாண்டுள்ளன.  அதில் சிறுமிகள் சிறு வீடு கட்டுவது என்பது ஒரு சிறப்பான நிகழ்ச்சி.  ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை,  அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் சிற்றில் பற்றிய வரிகள் உள்ளன.

சங்க காலத்தில் சிறு வயது பெண்கள் பந்தை வைத்து விளையாடினார்கள்.  வண்டல் பாவையை செய்தார்கள் (மண் பொம்மை).  கழற்சிக்காயை வைத்து விளையாடினார்கள்.  ஓரை என்ற விளையாட்டை விளையாடினார்கள்.  குரவை நடனம் ஆடினார்கள்.  மணலால் சிற்றில் கட்டி, சிறு சோறு சமைத்து விளையாடினார்கள்.  சிற்றில் கட்டி விளையாடுவதை ‘பொய்தல்’, ‘வண்டல்’ , ‘சிறு மனை’ என்ற சொற்களாலும் குறிப்பிட்டுள்ளார்கள்.  தமிழ் நாட்டில் இன்றும் கடற்கரை மணலில் குழந்தைகள் சிற்றில் கட்டி விளையாடுகின்றனர்.

சிறுமிகள் சிற்றில் கட்டுவது சங்க இலக்கியத்தில் துவங்கி, பின்  பதினெண்கீழ்க்கணக்கு, பாண்டிக்கோவை, மாணிக்கவாசகரின் திருக்கோவையார், வைணவ திவ்யப் பிரபந்தம் உட்பட, பல பிற்கால இலக்கியங்களுக்குச் சென்றுள்ளது.

  1. கடற்கரையில் சிறுமியர் சிற்றில் கட்டி விளையாடுவதை அம்மூவனார் எழுதிய இந்த குறுந்தொகைப் பாடலில் காணலாம். இங்கு தலைவி கூறுகின்றாள்,

துணைத்த கோதைப் பணைப் பெரும் தோளினர்
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒரு நாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே  (குறுந்தொகை 326)

தொடுத்த பூமாலையையும் மூங்கிலைப் போன்ற (பணை = மூங்கில்) பருத்த தோளையும் உடைய சிறுமிகள் கடலில் விளையாடியும் கடலோரச் சோலையில் (கானல் = கடற்கரைச் சோலை) கட்டியும் விளையாடிய இடத்தில் தலைவனைக் கண்டு கூடிய நட்பு, அந்தத் துறைவன் ஒரு நாள் பிரிந்தாலும் பல நாட்களுக்கு எனக்கு துன்பத்தைத் தரும்.

  1. இந்தப் பாடலில் போந்தைப் பசலையார் என்ற புலவர் தலைவனும் தலைவியும் இள வயதில் கடற்கரையில் சந்தித்ததை அழகாக விவரிக்கின்றார். தலைவன் கூறுகின்றான்,

தட மென் பணைத்தோள் மட நல்லீரோ
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம்  (அகநானூறு 110, 10-17)

“அகன்ற மென்மையான மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய மடப்பம் வாய்ந்த நல்லவர்களே!  பகலும் ஒளியை இழந்து விட்டது.  மிகவும் அசைதியுடன் இருக்கின்றேன்.  மெல்லிய இலையின் மேல் நீங்கள் இடும் உணவை உண்டு நானும் இந்த ஆரவாரமுடைய சிறு வீட்டில் தங்கினால் என்ன குறை”, என்று ஒருவன் கூறினான்.  அவனைக் கண்டு, முகத்தை தாழ்த்தி, ஒருவர் பின் ஒருவராக ஒளிந்து, “இது உனக்கு உரியது இல்லை.  இது கடலிலிருந்து வழிந்து வந்த (இழிந்த = கீழே வடிந்த) தடித்த மீனால் செய்த குழம்பு” என்றோம்.

  1. தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றப் பின் அவளுடைய தாய் அவளை நினைத்து வருந்தி அருகில் இருப்பவர்களிடம் கூறுகின்றாள்,

என் மகள்
செம்புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டீரோ கண்  உடையீரே?  (அகநானூறு 275, 17-19)

கண் உடையவர்களே!  என்னுடைய மகள் தன் சிவந்த சிறு விரல்களால் இழைத்த சிறு வீட்டை நீங்கள் கண்டீர்களா?

  1. இந்த கலித்தொகை பாடலில் தலைவி தன் தோழியிடம் தலைவனைப் பற்றிக் கூறுகின்றாள். அவனுடைய சிறு வயது குறும்பை இங்கு நாம் காணலாம்,

சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் 
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய 
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி  
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள், 
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே 
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு  (1-6)

ஒளியுடைய வளையல்களை அணிந்த தோழியே!  இதை நீ கேட்பாயாக! நாம் தெருவில் விளையாடிய பொழுது, நம்முடைய சிறிய மணல் வீட்டை காலால் சிதைத்து, நாம் அணிந்த மலர் மாலையை பிடுங்கி, நம்முடைய வரிப் பந்தை எடுத்துக் கொண்டு ஓடிய அந்த குறும்புப் பையன், ஒரு நாள் அம்மாவும் நானும் வீட்டில் இருந்த பொழுது, அங்கு வந்து “இல்லத்தில் உள்ளவர்களே! குடிக்க தண்ணீர் கொடுங்கள்” என்று வந்த பொழுது…

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் கண்ணன் சிற்றிலை உடைக்கும் பாடல் ஒன்று உள்ளது.

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்

விசித்திரப் பட வீதி வாய்த்

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்

அழித்தியாகிலும் உன் தன் மேல்

உள்ளம் ஓடி உருகலல்லால்

உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்

கள்ள மாதவா கேசவா உன்

முகத்தன கண்கள் அல்லவே (திவ்ய பிரபந்தம் 518)

 

வெள்ளை நுண் மணலைக் கொண்டு அனைவரும் வியக்கும்படி இழைத்த அழகிய சிறு வீட்டை நீ அழித்தாலும், அதற்காக எங்கள் நெஞ்சானது உருகும். உன் மேல் வெறுப்பு கொள்ள மாட்டோம். உன் முகத்தில் இருப்பவை அருள் கண்கள் அல்லவோ.

 

பெரியாழ்வாரின் திருமொழியில் கண்ணன் சிற்றிலை உடைக்கும் பாட்டு ஒன்று உள்ளது. கண்ணனின் தாய் யசோதை கூறுகின்றாள்,

 

பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில்

சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே

கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின்

எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (திவ்ய பிரபந்தம் 235)

 

மஞ்சளை மேனியில் பூசி, பெண்கள் இழைக்கும் மண் வீடுகளை சிதைத்து, குறும்புகளைச் செய்தவனை நான் கல் தூள்களையுடைய வேடர் இருப்பிடமான காட்டிற்கு அனுப்பினேன் என் மகனை.  என்னோ என் வினை.

%d bloggers like this: