நடுகல்

சங்கத் தமிழ் முத்துக்கள் –  நடுகல்

சங்க காலத்தில் வீரர்களுக்கும் மன்னர்களுக்கும், அவர்கள் இறந்த பின், நடுகல் நட்டும் வழக்கம் இருந்தது.  கோப்பெருஞ்சோழன், அதியமான் நெடுமான் அஞ்சி ஆகிய இரு மன்னர்களுக்கு நடுகல் நட்டியதை பாடல்கள் மூலம் அறிகின்றோம். தங்கள் மன்னனின் ஆநிரைகளை பிறர் கவர்ந்துச் செல்லும் பொழுது அதைத் தடுத்து நிறுத்தி உயிர் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன.   போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் நடுகற்கள் நட்டப்பட்டன.  நட்டிய கற்களில் இறந்தவர்களின் பெயர்களையும் அவர்களது மறச் செயல்களைப் பற்றிய விவரங்களையும் கூர்மையான உளியால் பொறித்தனர். ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கற்கள் நட்டப்பட்டன.  பெண்களுக்கு நடுகல் நட்டியதாக சங்க இலக்கியத்தில் குறிப்பு எதுவும் இல்லை.

புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய சங்க நூல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.  அக நூல்களான அகநானூறு ஐங்குறுநூறு ஆகியவற்றில் பாலைத் திணைப் பாடல்களில் மட்டுமே நடுகல் பற்றிய குறிப்புகள் உள்ளன.  இந்தத் திணையில் உள்ள நிலம் வறண்டுப் போனது. அங்குள்ள மரங்களும் செடிகளும் வாடிய நிலையில் இருக்கும்.  மிருகங்கள் குடிக்க நீர் இல்லாது தவிக்கும். பயணம் செய்பவர்களின் பொருட்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லும் கள்வர்கள் அங்கு உண்டு.  தலைவன் பொருள் சேர்க்க பாலை நிலம் வழியாகச் செல்வான்.  தலைவனும் தலைவியும் உடன்போக்கில் இந்த நிலத்தைக் கடந்து செல்வார்கள்.  அங்கு இறந்தவர்களுக்காக நாட்டிய நடுகற்கள் இருக்கும்.

பழந்தமிழர்கள் நடுகற்களை மிகவும் மதித்து, அவற்றை வழிபட்டனர்.  நடுகற்களைச் சுற்றி வேலை நட்டி அவற்றில் கேடயங்களைத் தொங்க விட்டார்கள்.  நடுகற்களை மயில் இறகுகளாலும் மலர்களாலும் அலங்கரித்து,  அவற்றின் மீது கள்ளை ஊற்றி சிறப்பத்தினர்.  துடி அடித்து ஆடுகளை அவற்றிற்குப் பலியாகக் கொடுத்தனர்.

  1. தமிழர்கள் நடுகல்லை எந்த அளவிற்குச் சிறப்பித்தார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். மாங்குடி கிழார் மிக அருமையாக இங்கு விவரிக்கின்றார்,

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335, 9-12)

“ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம் (பரவும் = வழிபடும்). நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது.”

  1. நோய் பாடியார் என்ற பெயரையுடைய இந்தப் புலவர் பாலை நிலப் பாதையில் கண்டதைப் பற்றிக் கூறுகின்றார்,

அரம் போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை  (அகநானூறு 67, 5-11)

“அரத்தால் பிளக்கப்பட்ட நுண்ணிய முனையையுடைய அம்பினால், முழுப் பார்வையுடன் நோக்காது ஆநிரையைத் திருடுபவர்கள், நெல்லி மரங்களுடைய நீண்ட பாதையில், இரவு நேரத்தில் வந்து கொன்ற நல்ல போர்களில் ஈடுப்பட்ட நாணம் கொண்ட வீரர்களின் பெயரும் புகழும் எழுதப்பட்ட மயில் இறகு சூட்டிய கேடயங்கள் (பலகை = கேடயம்) தொங்கும் ஊன்றிய வேல்களால் சூழப்பட்ட, விளங்கும் நடுகற்கள் இருக்கின்றன எல்லாப் பாதைகளிலும் (அதர் = பாதை).”

  1. பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவன் பொருள் ஈட்ட போயுள்ளான். பிரிவினால் வருந்திய தலைவி தோழியிடம் பேசுகின்றாள்.  தலைவன் கடந்து சென்ற பாலை நிலத்தைப் பற்றி இந்தப் பாடலில் சீத்தலைச் சாத்தனார் விவரிக்கின்றார்,

கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்  (அகநானூறு 53)

சூரியனின் கடுமையான கதிர்களின் வெட்பத்தால் ஏற்பட்ட நில பிளப்புகளில் பெரிய காட்டின் முருங்கை மரங்களின் வெள்ளை மலர்கள் கொட்டிக் கிடக்கும்.  ஆளில்லாத நீண்ட வறண்ட பாதையில் கூர்மையான பற்களையுடையச் ஆண் செந்நாய் வருத்தத்துடனும் பசியுடனும் தன் துணையுடன், தனிமையான பாதையில் (இயவு = பாதை) மறவர்களின் குறி தப்பாத வில்லிடம் வீழ்ந்தவர்களுக்காக நட்டிய எழுதுக்களையுடைய நடுக்கல்லின் இனிய நிழலில் வசிக்கும். அங்கு கள்ளிச் செடியும் வாகை மரங்களும் இருக்கும் (உழிஞ்சில் = வாகை). அங்கு உட்புறம் வாடிய வளைந்த மூக்கையுடைய நத்தை (நொள்ளை நத்தை) வாகை மரத்தின் சொர சொரப்பான அடியில் பொதிந்து இருக்கும்.

  1. இந்தப் பாடலில், நடுகல்லுக்கு அன்றைய தமிழர்கள் தந்த மரியாதையைப் பற்றிக் கூறுகின்றார் புலவர்,

இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்  (புறநானூறு 329, 1-4)

“வீடுகளில் கள்ளைச் செய்யும் சில குடிகளையுடைய சின்ன ஊரில், நடுகல்லிற்கு தினமும் படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள் (நெய் = எண்ணை, நெய்).  அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்களில் கமழும்.”

  1. தன்னுடைய அருமையான பெண், அவளுடைய தலைவனுடன் உடன்போக்கில் பாலை நிலத்தின் வழியே சென்றதால், வருந்தி, பாலை நிலத்தில் உள்ளவற்றைப் பற்றிக் கூறுகின்றாள் ஒரு தாய்,

நடுகல் பீலி சூட்டித் துடிப் படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்  (அகநானூறு 35)

“நடுகற்கள் மயில் தோகையால் அலங்கரிக்கப்படும்.   துடி அடித்து அரிசிக் கள்ளை அவற்றின் மீது ஊற்றுவர்.  செம்மறி ஆடுகளைப் பலி கொடுப்பார்கள் (துரூ =  செம்மறி ஆடு).  போக்குவரத்து இல்லாத வளைந்த பாதைகளை உடையது இறைச்சி நாற்றம் அடிக்கும் அரிய பாலை நிலம்.”

  1. ஓதலாந்தையார் யானையின் தும்பிக்கைச் சொர சொரப்பை, எழுத்துக்கள் பொறித்த நடுகல்லுடன் ஒப்பிடுகின்றார்,

விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை  (ஐங்குறுநூறு 352, 1-3)

“கள்வர்களுடைய வில்லினால் செலுத்திய குறித்தப்பாத அம்புகளால் உயிர் இழந்தோர்களுக்கு நட்டிய எழுத்துக்களையுடைய நடுகற்களைப் போன்று உள்ளது, யானையின் தழும்புடைய பெரிய தும்பிக்கை.”

  1. மலைபடுகடாம் என்ற ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் இன்னொரு பாணருக்கு நன்னன் என்ற குறுநில மன்னனின் நாட்டுக்கு செல்லும் வழியைப் பற்றி கூறும் பொழுது நடுகற்களை அவர் காண்பார் என்றுக் கூறுகின்றார்,

 

ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் (மலைபடுகடாம் 386 – 391)

புறமுதுகு இட்டவர்களை ஏசி நல்ல முறையில் தம் உயிரைக் கொடுத்த நாணமுடைய வீரர்களின் நீங்காத பெரும் புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில்.  உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுத் தொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள்.

  1. தன்னுடைய நண்பனான மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தப்பின் ஔவையார் மிகவும் வருத்திப் பாடுகின்றார்,

இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே?  (புறநானூறு 232)

“காலையும் மாலையும் இல்லாமல் போகட்டும்!  என் வாழ் நாள் இல்லாமல் போகட்டும்!  தன் நடுகல்லில் மயில் தோகையைச் சூட்டி சிறிய கிண்ணத்தில் நாரால் வடித்த மதுவை கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானா, ஓங்கிய சிகரங்களையுடைய விளங்கும் மலைகள் நிறைந்த நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவன்?”

  1. கோபெருஞ்சோழன் இறந்தப் பின் அவனுக்கு நடுகல் நட்டினார்கள். மன்னனின் நண்பரான புலவர் பொத்தியார் அப்பொழுது வருந்திப் பாடுகின்றார்,

நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே   (புறநானூறு 221, 8-13)

“ஆராய்ந்துப் பார்க்காத கூற்றுவன் அவனது இனிய உயிரை எடுத்துக் கொண்டு விட்டான்.  வருந்தும் உங்கள் குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாருங்கள், உண்மையைப் பேசும் புலவர்களே! நாம் கூற்றுவனைத் திட்டுவோம்.  நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது (அரந்தை = துன்பம்). குறையில்லா நல்ல புகழையுடையவன் (நல்லிசை = நல்ல புகழ்) நடுகல்லாகி விட்டான்.”

  1. மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி விவரிக்கின்றார் இந்தப் பாடலில்,

மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்

புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்

கண்ணி வாடிய மண்ணா மருங்குல்

கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து  (அகநானூறு 343, 47)

“உப்பு வணிகரின் (உமண்மகன் = உப்பு வணிகர்) மர மாட்டு வண்டியின் சக்கரம் வலுவான நடுகல்லின் மெல்லிய மேல் பகுதியை சிதைத்து விட்டது.  இட்ட மாலை வாடி, நடுகல் கழுவப்படாமல் உள்ளது (மண்ணா = கழுவாது).  கூர்மையான உளியால் அதன் மீது செதுக்கிய எழுத்துக்கள் அழிந்து விட்டன.”

நடுகல் பற்றிய குறிப்புடைய பாடல்கள்: 

அகநானூறு – 35, 53, 67, 131, 289, 297, 343, 365, 387
புறநானூறு – 221, 222, 223, 232, 261, 306, 314, 329
ஐங்குறுநூறு – 352
பட்டினப்பாலை – line 79
மலைபடுகடாம் – lines 388, 395

 

 

Advertisements
%d bloggers like this: