பெண் தர மறுத்தல்

சங்கத் தமிழ் முத்துக்கள் –  பெண் தர மறுத்தல்

சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் உள்ள மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டிய மன்னர்களின் கதைகள், குறுநில மன்னர்களின் கதைகள், மன்னர்களுக்கு இடையே நடக்கும் போர்கள், வீரம், போர் வீரர்கள், மன்னர்களுக்கும் புலவர்களுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த நட்பு, பாணர்களும் புலவர்களும் மன்னர்களைப் புகழ்தல்,  வள்ளல்கள், கொடை, வீரத் தாய்மார்கள்,  வீரர்களுக்கு நடுகல் நடுதல், வாழ்க்கை நெறி ஆகியற்றைப் பற்றி நாம் யாவரும் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் மன்னர்களுக்குச் சிலர் பெண் கொடுக்க மறுப்பதாக உள்ள பாடல்களைப் பற்றி நம்மில் அநேகர் கேள்விப் பட்டிருக்க மாட்டோம்.

புறநானூற்றில், மகட்பாற் காஞ்சி என்ற துறையில் உள்ள 20 பாடல்கள் இதை மிகத் தெளிவாக விவரிக்கின்றன (336-355).  பெரும் புலவர்களான கபிலர், பரணர், அள்ளூர்  நன்முல்லையார், அரிசில் கிழார் ஆகியோரும் பிற புலவர்களும் இப்பாடல்களை எழுதியுள்ளனர்.  பரணர் மொத்தம் 6 பாடல்களையும் கபிலர் மொத்தம் 2 பாடல்களையும் இந்தத் துறையில் எழுதியுள்ளனர். சிற்றூர்களில் உள்ள பழைய மரபுடைய குடும்பங்கள் மன்னர்களுக்கு பெண் கொடுக்க மறுத்ததால் ஊருக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்படும் துன்பங்களை இந்தப் பாடல்கள் மூலம் நாம் காணலாம்.

பெண்ணின் தந்தையும் அவளது அண்ணன்மாரும் அவளைத் தர மறுப்பது மட்டும் அல்லாமல், பெண் கேட்டு வரும் மன்னர்களோடு துணிவுடன் போரும் புரிகின்றனர்.  நாம் இந்த வரிகள் மூலம் மகட்பாற் காஞ்சித் திணைக்கு உரிய பல காட்சிகளை நன்றாக அறியலாம்.

  1. பெண்ணின் தந்தை அவளைத் தர மறுத்ததால் படையோடு வந்துள்ளான், அந்த பெண்ணை விரும்பும் மன்னன் ஒருவன். மன்னனுடன் போர் நடந்தால் ஊர் அழிந்து விடும் என்பதை அறியும்  ஊர் மக்களின் அச்சத்தை மிக அழகாக இந்தப் பாடலில் விவரிக்கின்றார் பரணர்.

வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடி மரம் சேரா சேர்ந்த
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க
அன்னோ பெரும் பேதுற்றன்று இவ் வருங்கடி மூதூர்  (பாடல் 336, வரிகள் 1-7)

“இந்தப் பெண்ணை மணம் புரியும் விருப்பத்தோடு வந்த மன்னனோ கடுங்கோபத்தில் இருக்கின்றான்.  இவளுடைய தந்தையோ செய்ய வேண்டிய கடமையைச் செய்யாது இருக்கின்றான்.  ஒளியுடைய முகத்தில் உள்ள தொடி (தொடி = வளை) அணிந்த நிமிர்ந்த, பெரிய தந்தங்களியுடைய யானைகள் மன்னனின் காவல் மரங்களில் கட்டப்படவில்லை (அவை இப்பொழுது இந்த ஊரில் இருக்கின்றன) .  வேல் ஏந்திய வீரர்களும் வாய்த் திறவாமல் இருக்கின்றனர்.  இசை வல்லுநர்களும் அறியாத பல இசைக் கருவிகள் முழங்கின்றன.  ஐயோ! பெரிய துன்பத்தை அடைந்துள்ளது, அரிய காவலை  (அருங்கடி = அரிய காவல்) உடைய இந்தப் பழைய ஊர்.”

  1. இந்தப் பாடலில் உள்ள பெண்ணின் தந்தை ஒரு சிற்றூரின் தலைவன். வயல்களுக்கு நடுவே உள்ள கோட்டை ஒன்றைக் கொண்டவன்.  மூவேந்தரே பெண் வேண்டி வந்தாலும், அவர்கள் அவனை வணங்காவிட்டால் தன் பெண்ணை அவர்களுக்குத் தர மாட்டான்.

வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்

மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்

கொற்ற வேந்தர் வரினும் தன் தக

வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்

பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று

உணங்கு கலன் ஆழியின் தோன்றும்

ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே   (பாடல் 338, வரிகள் 6-12)

 

“வெற்றி மிக்க மூவேந்தர்களான, வேம்பின் மலர்ச் சரத்தைத் தலையில் அணிந்த பாண்டிய மன்னனோ, ஆத்தி மலர்ச் சரத்தைத் தலையில் அணிந்த சோழ மன்னனோ, பனை இலைச் சரத்தைத் தலையில் அணிந்த சேர மன்னனோ பெண் கேட்க வந்தாலும் (சென்னியர் = தலையில் அணிந்தவர்கள்), தன் தகுதிக்கேற்பத் தன்னை வணங்காதவர்களுக்குத் தன் பெண்ணைத் தர மாட்டான் இந்த இளம் பெண்ணின் தந்தை.  இவன் வளமான தோட்டையும் (தோடு = அரிசி, தினை இவற்றின் இலை) பின்னிக் கிடக்கும் கதிரையும் உடைய வயலுக்கு நடுவில் மதில் சூழ்ந்த ஒரு கோட்டையை உடையவன். அவனுடைய கோட்டை கடற்கரையில் (ஆழி = கடற்கரை) காய்ந்து கிடக்கும் கட்டப்பட்ட மரக் கலத்தைப் போல் (உணங்கு கலன் = காய்ந்த கப்பல்) காட்சி அளிக்கின்றது.”

 

  1. தகுதி இல்லாதோரை இந்த இளம் பெண் மணக்க மறுப்பாள் என்று பரணர் இந்தப் பாடலில் கூறுகின்றார்.

…………………………..பொலந் தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன
நலம் சால் விழுப் பொருள் பணிந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
தந்தையும் கொடாஅன்  (பாடல் 343, வரிகள் 9-13)

 

“பொன் மாலையை அணிந்த சேரனின் கடல் போல் முரசு முழங்கும் முசிறி நகரைப் போன்ற உயர்ந்த பொருட்களைப் பணிந்துக் கொடுத்தாலும் அவர்கள் உயர்ந்தோர் ஆக இல்லாவிட்டால் இவள் அவர்களைத் திருமணம் செய்ய மாட்டாள்.  இவள் தந்தையும் தகுதி இல்லாதோர்க்கு இவளைத் தர மாட்டான்.”

  1. இந்தப் பாடலில், பெண் கேட்டு வரும் மன்னன், “நாளை நான் அவளைக் கண்பிப்பாக மணம் புரிவேன், அல்லது மேல் உலகத்திற்குச் செல்வேன்” என்று உறுதியாகச் சொல்கின்றான்.

……………………………….அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் (பாடல் 341, வரிகள் 11-15)

“நாளை அவளை மணம் புரிவேன். அல்லது அரிய போரைச் செய்வதற்குரிய வலிமையுடன் நீண்ட இலை வடிவில் ஆன வேலினால் புண்பட்ட உடம்புடன் திரும்பி வர முடியாத உலகத்திற்குச் செல்வேன்.”

இதே பாடலில்,  தங்களுடைய  ஊர் பாழாகிவிடுமோ என்ற ஊர் மக்கள் அடையும் துன்பத்தைக் கீழ்க்காணும் வரிகள் மூலம் நாம் அறிகின்றோம்.

களிறு பொரக் கலங்கிய தண் கயம் போலப்

பெருங் கவின் இழப்பது கொல்லோ

மென் புனல் வைப்பின் இத்தண் பணை ஊரே (பாடல் 341, வரிகள் 17-19)

 

“நீராடும் யானைகள் போரிடிவதால் கலங்கும் குளிர்ந்தக் குளம் போல், தன்னுடைய மிகுந்த அழகை இழந்து விடுமோ, வயல்களையுடைய இந்தக் குளிர்ச்சியான மருத நிலத்து ஊர்?”

  1. இளம் பெண்ணின் அண்ணன்மார்களைப் பற்றி இந்த பாட்டின் மூலம் அறிகின்றோம்.

மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள் தன் ஐமாரே
செல்வம் வேண்டார் செருப் புகல் வேண்டி
நிரல் அல்லோர்க்குத் தரலோ இல் எனக்
கழிப் பிணிப் பலகையர் கதுவாய் வாளர் (பாடல் 345, வரிகள் 11-15)

“விருப்பத்தை உண்டுப் பண்ணும் இந்த இளம் பெண்ணை விரும்புபவர்கள் இரங்கத்தக்கவர்கள்.  இவளுடைய அண்ணன்மார் (ஐ மாரே = அண்ணன்மாரே), பெண் கேட்டு வருபவர் தரும் செல்வத்தை ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.  அவளைத் தங்களுக்கு நிகரில்லாதவர்களுக்குத் தர மாட்டேன் என்றுக் கூறி, போர்ப் புரிவதை விரும்பி (செரு = போர்), கயிற்றால் கட்டிய கேடயத்தையும் புண்ணை உண்டாக்கும் வாளையும் கையில் ஏந்துவர்.”

  1. ஊரில் உள்ள மரங்களும், தெருக்களும், நீர்த் துறைகளும் பாழ்பட்டதை இந்த வரிகளில் புலவர் அண்டர் நடுங்கல்லினார் அழகாக எடுத்துரைக்கின்றார்.

களிறு அணைப்பக் கலங்கின காஅ
தேர் ஓடத் துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்குற்றன வழி
கலம் கழாஅலின் துறை கலக்குற்றன
தெறல் மறவர் இறை கூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய   (பாடல் 345, வரிகள் 1-6)

“யானைகளைக் கட்டியதால் சோலையில் உள்ள மரங்கள் நிலைகுலைந்தன.  தேர்கள் ஓடியதால் தெருக்களில் புழுதி நிரம்பியது.  குதிரைகள் அங்கும் இங்கும் செல்வதால் பாதைகள் பாழாகின.  படைக் கருவிகளைக் கழுவுவதால் நீர்த் துறைகள் கலங்கின.  வீரர்கள் ஊரில் தங்கியதால் நிலம் பாரத்தைத் தாங்க முடியாமல் நெளிந்தது.

  1. ஊரில் உள்ள மரங்களின் வேர்கள் அசையும் நிலைமையை அழகாக விவரிக்கின்றார் கபிலர்.

என்னாவது கொல் தானே . .. . ………………….
விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
வினை நவில் யானை பிணிப்ப
வேர் துளங்கின நம் ஊருள் மரனே   (பாடல் 347, வரிகள் 8-11)

“பருத்த அடிகளோடு விளங்கினாலும், வேந்தரின் போர்ப் பணியில் உள்ள யானைகள் அவற்றில் கட்டப்பட்டதால், நம் ஊரில் உள்ள மரங்களின் வேர்கள் அசைகின்றன.  என்ன ஆகுமோ இனி?”

  1. ஊரார் இளம் பெண்ணின் தாயை, மகளைப் பெற்றதற்காகப் பழிக்கின்றனர்.

குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனாளாயினள் ஆயின் ஆனாது
நிழல் தொறும் நெடுந்தேர் நிற்ப வயின் தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தல மன் எம் பெருந்துறை மரனே  (பாடல் 348, வரிகள் 6-10)

“குவளை மலர்களைப் போன்ற கண்களையுடைய இவளை இவள் தாய் பெறாது இருந்தால், இந்த நிலை வந்திருக்காது.  நிழல் இருக்குமிடமெல்லாம் உயரமான தேர்கள் நிற்கின்றன.  எல்லா இடங்களிலும் சிவந்த நெற்றியையுடை யானைகள் கட்டப்பட்டுள்ளன. எங்கள் பெரிய குளக் கரையில் உள்ள மரங்கள் பாழ்ப்பட்டு விட்டன.”

  1. மன்னனின் ஆத்திரம், தந்தையின் நிலை, மற்றும் இளம் பெண் தன் ஊருக்குத் தரும் துன்பம் யாவற்றையும் மிகச் சுவையாக இந்தப் பாடலில் விளக்குகின்றார் மதுரை மருதன் இளநாகனார்.

நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
அரி மதர் மழைக்கண் அம் மா அரிவை
மரம் படு சிறு தீப் போல
அணங்காயினள் தான் பிறந்த ஊர்க்கே  (பாடல் 349)

வேலின் நுனியால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து ஆத்திரத்துடன் பேசுகின்றான் வேந்தன். இவளுடைய தந்தையும் கடியச் சொற்களையோ பணிவானச் சொற்களையோ கூறவில்லை.  இது தான் இவர்களின் நிலை.  இந்த நிலைமை எதனால் என்று ஆராய்ந்தால் கூர்மையான பற்களையும் சிவப்பு வரிகளையுடைய கண்களையும் உடைய அழகிய கருமை நிறப் பெண் தான் காரணம்.  மரத்தில் பற்றிய சிறு தீ பெருகி காட்டையே அழிப்பதுப் போல் தான் பிறந்த ஊருக்கு இவள் பெரிய துன்பத்தை விளைவிக்கின்றாள்.

 

 

 

%d bloggers like this: